திங்கள், 13 ஏப்ரல், 2015

இந்த தொடர் கலாச்சாரம்தான் தொடரும் கலாச்சாரமா ?

விவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்வது தான் சன் தொலைக்காட்சியின் தொடர் கலாச்சாரமா? என்ற தலைப்பில் சென்ற பதிவில் எழுதி இருந்தேன்.இந்த தொடர் கலாச்சாரம் தொடரும் கலாச்சாரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது மற்ற சில தொடர்களையும் பார்க்கும் போது.

மரகதவீணை தொடரில் இன்ஸ்பெக்டர் கவிதா ஒரு கணவன் மனைவியைப் பிரித்து கணவனுடன் வாழ நினைக்கிறார்.  மூன்றெழுத்து தொடரான தாமரையில் மீனா ஆர்த்தியின் கணவருடன் வாழ நினைக்கிறாள்,  கல்யாணப்பரிசு தொடரில் காயத்ரியை மணந்து கொள்ள கௌரியின் கணவன் முயல்கிறான். அழகியில் சோமுவின் மனைவி மதியை திரமணமான பாபு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். இப்படி பல தொடர்களில் இன்னொருவரின் கணவரையோ அல்லது மனைவியையோ விரும்புவது போல வரும்படி கதையை அமைப்பதுதான் இப்போதைய ஃபேஷனா?  உலகில் நடப்பதைத் தானே காண்பிக்கிறோம் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள் தொடர் தயாரிப்பாளர்கள். ஏதோ ஓரிரண்டு தொடரில்தான் இப்படி என்றால்கூட இதை ஒத்துக் கொள்ளலாம். பல தொடர்களிலும் இப்படித்தான் என்றால் என்ன அர்த்தம். .

ஒரு வழியாக முந்தானை முடிச்சு தொடர் முடிவுக்கு வந்தது. அப்பாடா இந்த பிரேமாவின் அட்டகாசம் ஒழிந்தது என்று பல இல்லத்தரசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். தொடரின் முடிவில் பழைய கால திரைப் படங்கள் பாணியில் பிரேமா ஒவ்வொன்றாகச் சொல்லி அதை நான்தான் செய்தேன் இதையும் நான் தான் செய்தேன் என்னைக் கொன்று விடுங்கள் என்று எல்லோரிடமும் கெஞ்சுவது போலவும் கடைசியில் அந்த பிரேமாவே தானே தீயில் விழுந்து இறந்து விடுவது போலவும் கதையை முடித்து விட்டார்கள். சாமியாடிக் கொண்டிருந்த கோவில் பூசாரி ஆடிக்கொண்டே இருக்க அவர் எதிரிலேயே இதெல்லாம் நடப்பதாகக் காட்டியதைத் தான் ஏற்க முடிய
வில்லை.

ஞாயிறு காலை கந்தர் சஷ்டி கவசம் ஒளிபரப்பினார்கள். அதைப் பார்க்கத் துவங்கினால் பாதியில் நிறுத்திவிட்டு ஆலய தரிசனம் என்று வேறு நிகழ்ச்சிக்குத் தாவி விட்டார்கள். கந்தர் சஷ்டிக் கவசத்தை இடம்பெறச் செய்தால் அதை முழுவதுமாக ஒளிபரப்ப வேண்டும் இல்லையெனில் அதை ஒளிபரப்பாமல் இருக்க வேண்டும். இனியாவது இப்படி பாதியில் நிறுத்தாமல் முழுவதுமாக இடம்பெறச் செய்வார்கள் என்று எதிர் பார்க்கலாமா?









2 கருத்துகள்:

  1. பணம் பாதியளவு தான் கிடைத்திருக்குமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பர வருவாய்க்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள். தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.